பகிர்வு 4

திருமதி சுமதி பத்மநாபன்
கலிஃபோர்னியா தமிழ்க் கழகம்

திருமதி நாராயணி சுவாமிநாதன்
உலகத் தமிழ்க்கல்விக் கழகம்
தன்விவரம்
கலிஃபோர்னியா தமிழ்க் கழகம் புலம்பெயர்ந்து கலிஃபோர்னியாவில் வாழும் பிள்ளைகளுக்குத் தமிழ்மொழியையும் பண்பாட்டையும் கற்பிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது. இப்பொழுது உலகெங்கிலும் உலகத் தமிழ்க்கல்விக் கழகம் எனும் பெயரில் செயற்பட்டு வருகிறது. எங்கள் பள்ளியில் தற்போது ஏறத்தாழ 15,000 மாணவர்கள் தமிழ் கற்கிறார்கள். உலகெங்கிலும் உள்ள ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்களிடமிருந்து கருத்துகளைப் பெற்று இந்தப் பள்ளி தொடர்ந்து பாடக்கலைத்திட்டத்தை மேம்படுத்தி வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் தொழில்முறைப் பயிற்சியாளர்களும் கல்வியாளர்களும் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்கள்.
திருமதி சுமதி பத்மநாபனும் (வெங்கடபதி), திருமதி நாராயணி சுவாமிநாதனும் உலகத் தமிழ்க்கல்விக் கழகத்தில் தொண்டூழியத் தமிழாசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். திருமதி சுமதி பத்மநாபன் தொழில் ரீதியாக மரபியல் விஞ்ஞானி. இவர் கடந்த 22 ஆண்டுகளாக உலகத் தமிழ்க்கல்விக் கழகத்தில் அனைத்துத் தரநிலைகளிலும் கற்பித்து வருகிறார். மேலும், பாடக்கலைத்திட்டம் மற்றும் கல்வித் தரநிலை மேம்பாட்டுக் குழுக்களில் தீவிரமாகப் பங்கேற்கிறார். தற்போது பாலர் இரண்டாம் நிலை பிள்ளைகளுக்குக் (4-5 வயது) கற்பிக்கிறார்.
திருமதி நாராயணி சுவாமிநாதன் முறைசாரா கல்வி அமைப்பில் 11 வருட அனுபவமுள்ள ஒரு தொழில்முறை கல்வியாளர். கடந்த 6 வருடங்களாக 3-6 வயதுக்குட்பட்டப் பிள்ளைகளுக்குத் தமிழ்மொழியைக் கற்றுக் கொடுக்கிறார்.
இவர்கள் இருவரும் பிள்ளைகளுக்கு வேடிக்கையான விளையாட்டுகள், கதைகள் மற்றும் இருவழிக் கருத்துப்பரிமாற்றச் செயற்பாடுகளைப் பயன்படுத்தி எளிய முறையில் கற்பிக்கிறார்கள்.
கற்றல் நிலைய நடவடிக்கைகளின் வாயிலாகவும் விளையாட்டுகள் வாயிலாகவும் பிள்ளைகளைத் தமிழில் பேச ஊக்குவித்தல்
சுருக்கவுரை
குழந்தைகள் கதைகள், வேடிக்கை நிறைந்த விளையாட்டுகள், ஆர்வமூட்டும் நடவடிக்கைகள் முதலியவற்றை விரும்புகிறார்கள். கதைகள், வயது வரம்பின்றிப் பிள்ளைகளை ஒன்றிணைப்பதோடு அவர்களது சுற்றுச்சூழலைப் புரிந்துகொள்வதற்கும் துணைபுரிகின்றன. இதேபோல் ஒலிகள், சொற்கள், தொடர்கள் முதலியவற்றை அறிந்துகொள்ளவும் கைவரப்பெறவும் ஆரம்பகால எழுத்தறிவுத் திறன்களை வளர்க்கவும் வேடிக்கை நிறைந்த விளையாட்டுகள் உதவுகின்றன. அதே நேரத்தில் பெற்ற அறிவை நீண்ட காலத்திற்குத் தக்க வைத்துக்கொள்ளவும் இவை உதவுகின்றன. இந்தப் பகிர்வின் வாயிலாகச் செயல்கள் மூலம் கற்றல் (TPR), படித்தல் மற்றும் கதை சொல்லுதல் மூலம் கற்பித்தல் திறன் (TPRS), வகுப்பறைச் சூழலில் பிள்ளைகளை ஈடுபடுத்த எளிய விளையாட்டுகள் முதலியவை எவ்வாறு உதவும் என்பதை அறிந்துகொள்ளலாம். மேலும், இப்பகிர்வில் கற்றல் நிலையங்களில் பிள்ளைகளை எவ்வாறு எளிய விளையாட்டுகளில் ஈடுபடுத்தலாம் என்பதற்கான செயல்விளக்கமும் இடம்பெறும்.
இம்முறைகள் பாரம்பரிய மொழியைக் கற்கும் பிள்ளைகள் அதை இயல்பாகக் கற்றுக்கொள்வதற்கு உதவும் வகையில் அமையப்பெற்றவை. அவற்றின் வாயிலாகப் பிள்ளைகளின் கேட்டல், பேசுதல் திறன்களை மேம்படுத்துவதே நோக்கமாகும். இந்த முறைகளை ஆசிரியர்கள் கற்றல் நோக்கங்களுக்கு ஏற்றவாறு தங்கள் கற்பனைத்திறன், படைப்புத்திறன் வழியாக வேறுபடுத்திப் பல்வேறு ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்துக்கொள்ளலாம்.