பகிர்வு 2

திருமதி தர்மராஜ் புஷ்பலதா
ம செ க சமூக அறநிறுவனம்
தன்விவரம்
திருமதி புஷ்பலதா ம.செ.க சமூக அறநிறுவனத்தில் தமிழ்மொழிச் சிறப்பாய்வாளராகப் பணியாற்றுகிறார். இவர் பாலர் பள்ளித் தமிழ்ப் பாடக்கலைத்திட்ட வரைவு மற்றும் பாலர் பள்ளித் தமிழாசிரியர்களுக்குப் பயிற்சியளிக்கும் குழுவில் இருக்கிறார். இவர் பாலர் பருவப் பராமரிப்பு மற்றும் தொழில்முறைப் பட்டயக் கல்வியையும் பாலர் பருவத் தாய்மொழி கற்பித்தல் சான்றிதழ் கல்வியையும் பெற்றுள்ளார். இவர் ஆறு ஆண்டுகள் பாலர் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
தாய்மொழி ஆசிரியர்களுக்கான கருத்தரங்கத்தில், ‘விளையாட்டுவழித் தமிழ்மொழி கற்பித்தல்’ என்னும் தலைப்பிலும் ஆரம்பக்காலத் தமிழ்ப் பட்டயக்கல்வி இறுதியாண்டு மாணவர்களுக்கு ‘வேறுபடுத்தப்பட்ட கற்பித்தல்’ என்னும் தலைப்பிலும் பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பகிர்வரங்கில் ‘வகுப்பறைக்கு அப்பாலும் தமிழ்மொழிமீது பிள்ளைகளை ஆர்வங்கொள்ளச் செய்தல்’ என்னும் தலைப்பிலும் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இவர் 2019-ஆம் ஆண்டு கல்வி அமைச்சின் பாலர் பள்ளித் தாய்மொழி ஆசிரியருக்கான நல்லாசிரியர் விருதைப் பெற்றுள்ளார்.
ஆர்வமூட்டும் விளையாட்டுகளின்வழியே தமிழ்மொழி கற்றல்
சுருக்கவுரை
உளவியலாளர்கள் விரும்பத்தக்கச் சூழ்நிலை அமைந்தால்தான் பிள்ளைகளின் கற்றல் நிகழும் என்கின்றனர். பிள்ளைகள் விளையாட்டை அதிகம் விரும்புகின்றனர். அதனால், விளையாட்டுவழிக் கற்றலில் பங்கேற்கும்போது அவர்கள் சுய முனைப்புடனும் சுய கற்றலிலும் ஈடுபடுகிறார்கள். இவ்வகையில் கற்றவை மனத்தில் ஆழமாகப் பதிவதால், பிள்ளைகளால் இத்திறன்களை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்த இயலும். அர்த்தமுள்ள விளையாட்டு, பிள்ளைகளின் கற்றலை மேம்படுத்துகிறது. பிள்ளைகளுக்கு உட்புற விளையாட்டு, வெளிப்புற விளையாட்டு முதலிய இரண்டுமே பிடிக்கும். எனவே, தமிழ்மொழியைக் கற்பிக்க அர்த்தமுள்ள விளையாட்டைப் பயன்படுத்தி அதன் வாயிலாகத் தரமான கருத்துப்பரிமாற்றங்கள் நிகழச் செய்யலாம்.
இந்தப் பகிர்வரங்கின் வாயிலாக இந்தக் கற்பித்தல் உத்திமுறையையும் அதற்குப் பயன்படுத்தப்படும் பயிற்றுவளங்களைப்பற்றியும் அறிந்துகொள்ளலாம்.