பயிலரங்கம் 1

திருவாட்டி ஜீவா ரகுநாத்
AKT Creations நிறுவனம்
தன்விவரம்
அனுபவம் வாய்ந்த கதைசொல்லியும் எழுத்தாளருமான திருவாட்டி ரகுநாத்தின் விறுவிறுப்பான கதைசொல்லும் நிகழ்ச்சிகள் பிள்ளைகளையும் பெரியவர்களையும் வியக்க வைக்கின்றன. அவர் 14 கதைப்புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும், இவர் சுமார் 65 ஆங்கிலப் புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். உலகெங்கிலும் உள்ள ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் குறிப்பாக, சிங்கப்பூரில் உள்ள தமிழ்ச் சமூகத்திற்குப் பல பயிலரங்குகளை நடத்தியுள்ளார்.
கதையோடு விளையாடு, தமிழோடு உறவாடு!
சுருக்கவுரை
தமிழ்மொழியைக் கற்பதற்கு அர்த்தமுள்ள விளையாட்டைக் கதைகள் வாயிலாகவும் நடைமுறைச் செயற்பாடுகளின் வாயிலாகவும் பயன்படுத்தும்போது பிள்ளைகளின் கேட்டல் திறனையும் பேசுதல் திறனையும் வளர்க்க முடியும். இது பின்னர், படித்தல், எழுதுதல் திறன்களின் வளர்ச்சிக்கும் துணைபுரிகிறது. பிள்ளைகள் கதைகள் கேட்பதால் மற்றவர்களின் எண்ணங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. மேலும், பிள்ளைகள் கதை கேட்கும்போது அக்கதையைத் தங்கள் அன்றாட வாழ்க்கைச் சூழ்நிலைகளோடு தொடர்புபடுத்திப் பார்க்கிறார்கள்.
ஆசிரியர் பிள்ளைகளைக் கதைகளின் வழியாகவும் செயற்பாடுகளின் வழியாகவும் கற்பனை உலகத்திற்கு இட்டுச் செல்கிறார். இதன் தொடர்ச்சியாகவும் நீட்சியாகவும் பெற்றோர்களும் பிள்ளைகளுக்கு நடைமுறைசார்ந்த அன்றாட சூழ்நிலைகளை அமைத்துக் கொடுக்கலாம். மொழி கற்றல் ஆசிரியர்-பிள்ளை-பெற்றோர் ஆகிய முத்தரப்பினரின் கூட்டு முயற்சியாகும். அர்த்தமுள்ள விளையாட்டின் வாயிலாக முறையான கற்றலின் அழுத்தம் இல்லாமல், பிள்ளைகள் கற்றலில் ஈடுபடுகிறார்கள்.