பகிர்வு 2

முனைவர் சிவா பிள்ளை
மொழி மற்றும் கலைத் தமிழ்க் கழகம்
தன்விவரம்
முனைவர் சிவா பிள்ளை லண்டனில் உள்ள ‘கோல்ட்ஸ்மித்’ பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையின் கணினி அதிகாரியாகவும், சவுத்வார்க் கல்லூரியில் தொழில் நுட்ப விரிவுரையாளராகவும் பணிபுரிந்து உள்ளார். ஓய்வு பெற்றிருக்கும் திரு சிவா பிள்ளை, தற்போது வருகை விரிவுரையாளராகப் பணி புரிகிறார். இவர் ‘Edexcel iGCSE’ தமிழ்மொழி ஐக்கிய ராச்சியத்துக்கான முதன்மைத் தேர்வாளர் ஆவார். திரு சிவா பிள்ளை லண்டன் ‘லூவிஷ்ஹாம்’ சார்ந்த மொழி மற்றும் கலைத் தமிழ்க் கழகத்தில் இயக்குநராகவும், தமிழ்த் தகவல் தொழில் நுட்பப் பிரிவின் இயக்குநராகவும் உள்ளார். தகவல் தொழில் நுட்பத்தின் வாயிலாக உருவாக்கப்படும் வாய்ப்புகளையொட்டி உலக அளவிலான மாநாடுகளில் இவர் தம் கட்டுரைகளைப் படைத்து வருகிறார்.
ஐக்கிய ராச்சியத்தில் விளையாட்டுகளின்வழியே தமிழ்மொழி கற்றல்
சுருக்கவுரை
மொழி என்பது தொடர்பு ஊடகம். பிள்ளை ஆதியில் தன்னுடைய தாய்மொழியில் இந்த உலகத்தைத் தெரிந்துகொள்வதற்கு மொழியை அல்லது ஓர் ஊடகத்தைக் கற்றது. ஆனால், இன்று நிலை அவ்வாறு இல்லை. ஒரு பிள்ளை பல்வேறு காரணங்களால் பன்மொழிச் சூழலில் வளரும்போது பிரதான மொழியையும் தன்னுடைய தாய்மொழியையும் கற்றுக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஒரு குழந்தையின் நிற முகூர்த்தங்களில் உள்ள மொழிசார்ந்த தகவல்கள் சூழ்நிலை காரணமாக முரண்பட்டு நிற்கின்றன. ஒரு பிள்ளைக்குத் தமிழ் கற்பிக்கும்போது பெற்றோர்கள் அல்லது ஆசிரியர்கள் முதலில் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல் மொழியைக் கற்பிக்க வேண்டும். பிள்ளைகளுக்கிடையே தமிழ்மொழி ஆர்வத்தை ஊக்குவிக்க விளையாட்டுப் பெரிதும் துணைபுரிகிறது. பிள்ளைகள் ஈடுபாடுமிக்க கற்றலில் ஈடுபடுவதற்கு ஆசிரியர் கற்றல் நோக்கங்களைப் பாடத்திற்கு முன் நன்கு சிந்தித்துத் தீர்மானித்து வைத்துக்கொண்டு ஆர்வமூட்டும் பாடங்களைத் திட்டமிட வேண்டும். அப்போதுதான் பிள்ளைகளின் கற்றல் மகிழ்வூட்டும் ஒன்றாக அமையும். விளையாட்டினால் பிள்ளைகளது சமூகத்திறன், உணர்ச்சி, அறிவாற்றல், இயக்கவியல் திறன்கள் உள்ளிட்ட அனைத்துத் திறன்களும் மேம்படுகின்றன. கூடிக்கற்றல், சிக்கல்களுக்குத் தீர்வு காணுதல், முடிவெடுத்தல் ஆகியவற்றுக்கான வாய்ப்புகளை விளையாட்டு வழங்குகிறது.
இந்தப் பகிர்வரங்கு மேற்கூறியவற்றை ஆராய்கிறது.