பகிர்வு 4

திருமதி. அடைக்கப்பன் வள்ளியம்மை
கல்வி அமைச்சின் பாலர் பள்ளி (நேவல் பேஸ்)
தன்விவரம்
திருமதி அடைக்கப்பன் வள்ளியம்மை, கல்வி அமைச்சின் பாலர் பள்ளியில் (நேவல் பேஸ்) தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழு 2018-ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்த பாலர் பள்ளி தமிழாசிரியர்களுக்கான கருத்தரங்கில் ‘பாரம்பரிய விளையாட்டுகளின்வழிப் பிள்ளைகளுக்கு விழுமியங்களைக் கற்றுக்கொடுத்தல்’ என்னும் தலைப்பில் பகிர்ந்துகொண்டார். இவர் தமது பாலர் பள்ளியில் பயிற்சி பெற வரும் மாணவ ஆசிரியர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்திருக்கிறார். மேலும், 2020முதல் 2021வரை கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளுக்கான பயிற்றுவளங்களை மறு ஆய்வு செய்யும் பணிக்குழுவில் உறுப்பினராகவும் இருந்து ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.
பாலர் பள்ளியில் பாரம்பரிய விளையாட்டுகளின்வழியே தமிழ்மொழி கற்றல்
சுருக்கவுரை
நம் பிள்ளைகளிடையே தாய்மொழியை வாழும் மொழியாக நிலைபெறச் செய்வதே எமது இலக்கு. ஆர்வத்தோடு கற்றால் அளவின்றிக் கற்கலாம் என்னும் கூற்றுக்கிணங்க, நம் பிள்ளைகள் தமிழ்மொழிமீது ஆர்வங்கொள்ள அவர்கள் விரும்பும் விளையாட்டை அவர்களது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தலாம். பாரம்பரிய விளையாட்டுகள்வழித் தமிழ்மொழி கற்றலை எவ்வாறு பயன்மிக்க வகையில் அணுகலாம் என்பதை அறிமுகப்படுத்துவதே இப்பகிர்வின் நோக்கமாகும். பிள்ளைகளின் சொல்வளத்தைப் பெருக்குவதற்குத் தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் பாரம்பரிய விளையாட்டுகளை அறிமுகப்படுத்துவதன் பயன்கள் இப்பகிர்வில் படம் பிடித்துக்காட்டப்படும். தமிழ் வகுப்பறைகளில் எவ்வாறு பாரம்பரிய விளையாட்டுகளை அறிமுகஞ்செய்து அதன் வாயிலாக மரபையும் பண்பாட்டையும் இலைமறைக் காயாகப் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பது ஆகியவற்றைப்பற்றியும் இந்தப் பகிர்வரங்கில் அறிந்துகொள்ளலாம்.