பகிர்வு 1

திரு. முத்து நெடுமாறன்
தோற்றுநர், முரசு அஞ்சல், கனியும் மணியும்
தன்விவரம்
திரு முத்து நெடுமாறன் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழுக்கான தொழில்நுட்பங்களையும் செயலிகளையும் உருவாக்கி வருகிறார். இவர் முரசு அஞ்சல் மென்பொருளை முதன்முதலில் 1985-இல் உருவாக்கினார். இந்த மென்பொருள் ‘ஆப்பிள்’ தளங்களிலும் பெரும்பாலான சிங்கப்பூர்ப் பள்ளிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. பிள்ளைகள் தமிழ்மொழியைக் கேட்கவும் படிக்கவும் விளையாடவும் உதவும் செயலித் திட்டம் ஒன்றைத் தொழில்முறை கல்வியாளர்களின் குழுவுடன் சேர்ந்து, சில ஆண்டுகளுக்குமுன் தொடங்கினார். இவர் ‘கனியும் மணியும்’, என்ற செயலியைச் சிங்கப்பூர்த் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழுவுடன் இணைந்து உருவாக்கினார். இந்தச் செயலி 2019-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. தமிழ்த் தொழில்நுட்பம், எழுத்துருவாக்க நுட்பங்கள் முதலிய தலைப்புகளில் உலக அளவிலான மாநாடுகளில் இவர் தம் கட்டுரைகளைப் படைத்து வருகிறார்.
பிள்ளைகளிடையே வீட்டில் தமிழ்மொழிப் புழக்கத்தை ஊடாடும் கதைகளின் வழியாகவும் விளையாட்டுகளின் வழியாகவும் ஊக்குவித்தல்
சுருக்கவுரை
கல்வி வீட்டிலிருந்து தொடங்குகிறது. குழந்தைகளின் கல்வியில் குடும்ப உறுப்பினர்களின் ஈடுபாட்டினைக் கல்வியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மொழி கற்றலுக்கு இந்த ஈடுபாடு மிகவும் அடிப்படையாகத் தேவைப்படுகிறது அல்லவா? குழந்தைகள் தங்களது இல்லங்களில்தான் தாய்மொழியில் உரையாடுவதற்கும் கருத்துப்பரிமாற்றம் செய்வதற்கும் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால், இன்று வீடுகளில் ஆங்கிலம் முதன்மையான தொடர்பு மொழியாக மாறியுள்ளது. அதனால், குடும்ப உறுப்பினர்களும் குழந்தைகளும் தங்கள் தாய்மொழியில் அதிக ஈடுபாட்டைக் காட்டக் கூடுதலான வளங்கள் தேவைப்படுகின்றன. வீட்டில் குழந்தைகளின் தமிழ்மொழி ஈடுபாட்டினை அதிகரிப்பதற்காகவும் விளையாட்டுகளின்வழியே அவர்கள் களிப்புடன் கற்பதற்காகவும் உருவாக்கப்பட்ட ஒரு நவீனச் செயலி குறித்து இந்தப் பகிர்வரங்கத்தில் பகிர்ந்துகொள்ளப்படும். குடும்ப உறுப்பினர்கள் இச்செயலியைக் குழந்தைகளோடு இணைந்து பயன்படுத்துவதோடு, இதை எவ்வாறெல்லாம் புத்தாக்க வழிகளில் பயன்படுத்தலாம் என்றும் இந்தப் பகிர்வரங்கம் ஆராயும்.