பகிர்வு 3

முனைவர் சுந்தர ஆவுடையப்பன்
நிகழ்ச்சி இயக்குநர் (ஓய்வு) அகில இந்திய வானொலி, இலக்கிய அறிஞர்
தன்விவரம்
முனைவர் சுந்தர ஆவுடையப்பன் முதுகலை (M.A,)(தமிழ் இலக்கியம்) வரையிலான கல்லூரிக் கல்வியை மதுரைத் தியாகராசர் கலைக் கல்லூரியிலும் (1976-1982), எம்.பில்.,(M.PHIL.) பிஎச்டி., (PH.D.) ஆகிய ஆராய்ச்சிக் கல்வியை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் (1983-1989) பயின்று பட்டங்கள் பெற்றுள்ளார். இவரது இளநிலை ஆய்வு சிறுதெய்வ வழிபாட்டு மரபுகள் பற்றியது; பிஎச்டி., ஆய்வு தமிழ்ப் புதுக்கவிதைகளில் மேற்கத்தியத் தாக்கம் குறித்த ஒப்பிலக்கியம் சார்ந்தது.
அகில இந்திய வானொலியில் நிகழ்ச்சிப் பொறுப்பாளராகத் தேர்வாகி 1991-ஆம் ஆண்டில் தமது ஊடகப் பணியைப் புதுச்சேரி வானொலியில் தொடங்கினார். நிகழ்ச்சிப் பொறுப்பாளர், நிகழ்ச்சித் தலைவர், உதவி இயக்குநர், நிகழ்ச்சி இயக்குநர் ஆகிய நிலைகளில், பல வானொலி நிலையங்களில் 29 ஆண்டுகள் பணியாற்றி 2020-ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். லண்டன் பி.பி.சி (BRITISH BROADCASTING CORPORATION) வானொலி அழைப்பின் பேரில் பாலியல் கல்வி தொடர்பான பயிலரங்கிற்காக லண்டன் சென்று திரும்பினார் (2000). வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை அழைப்பின்பேரில் பால்ட்டிமோரில் நடைபெற்ற தமிழர் மாநாட்டில் பட்டிமன்ற நடுவராகக் கலந்துகொண்டார். இவர் அமெரிக்காவில் பத்துக்கும் மேற்பட்ட மாநிலத் தமிழ்ச்சங்கங்களில் இலக்கிய உரைகள் வழங்கியுள்ளார்.
குவைத், மஸ்கட், துபாய், அபுதாபி போன்ற நாடுகளிலுள்ள தமிழ் அமைப்புகளின் அழைப்பின் பேரில் அங்குச் சென்று பட்டிமன்றங்களிலும் சொல்லரங்கங்களிலும் பங்கேற்றுள்ளார்.
கதைகள் மற்றும் நாடகப் பாங்கான உரையாடல்கள் வழியாகத் தமிழ்ப் பண்பாட்டு விழுமியங்களைக் கற்பித்தல் (திருக்குறள் குறிப்புடன்)
சுருக்கவுரை
திருக்குறள் எல்லா மதத்தினருக்கும் இனத்தினருக்கும் நாட்டினருக்கும் பொதுவான பண்பாட்டு விழுமியங்களை எடுத்துரைக்கும் தமிழின் அடையாள நூல். கற்றறிந்த மூத்தோர் மட்டுமல்லாது கற்கத் தொடங்கும் மழலையர்க்கும் மகிழ்ச்சியை அளிக்க வல்லவை குறள்கள். குறள்வழி விளங்கலாகும் தமிழர் வாழ்வியல் அறங்களை எளிய கதைகள் வாயிலாகவும் நாடகப் பாத்திர உரையாடல்கள் வாயிலாகவும் கலந்துரையாடல் வாயிலாகவும் காட்சிப்படுத்திச் சிறார்கள் மனங்கொள்ளும் வகையில் கற்பிக்கலாம். இந்தப் பகிர்வரங்கில் விருந்தோம்பல், நட்பு, இனியவை கூறல், கொல்லாமை, விடாமுயற்சி ஆகிய பண்பாட்டு விழுமியங்களைக் குறள் அடிப்படைக் கதைகள், காட்சிப்படுத்தும் கலந்துரைகள், நாடக உரையாடல்கள் ஆகியவற்றின்வழி எவ்வாறு கற்பிக்கலாம் எனப் பகிர்ந்துகொள்ளப்படும்.