முதன்மையுரை

முனைவர் க. காவேரி
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம்
தன்விவரம்
முனைவர் க. காவேரி, முனைவர் பட்டத்திற்கான கல்வியை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார். தற்போது அவர் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளம்பருவக் கல்வித்துறையில் பணிபுரிகிறார். இருபது ஆண்டுகளுக்கும் அதிகமாகக் கல்வித்துறையில் பணியாற்றியுள்ள இவர், தற்போது இளம்பருவக் கல்வியாளர்களுக்குப் பணியிடைப் பயிற்சியும் பணிக்கு முந்தைய பயிற்சியும் வழங்கி வருகிறார். இவர் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக் கல்வி, வீடு-பள்ளி முதலியவற்றின் பங்காளித்துவம், ஆசிரியருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே நிகழும் தரமான கருத்துப்பரிமாற்றம் ஆகிய கூறுகளையொட்டி ஆய்வுகள் செய்து வருகிறார்.
சுருக்கவுரை
அர்த்தமுள்ள விளையாட்டு; தரமான கருத்துப்பரிமாற்றம் முதலியவற்றின்வழியே தமிழ்மொழி கற்றல் கற்பித்தல்
நமது பன்முகப் பண்பாடு, பன்மொழிச் சூழலில் இளம் பிள்ளைகள் தாய்மொழியைக் கற்க வேண்டுமாயின், அவர்களது வளர்ச்சியில் முக்கியப் பங்குபெறுவோர் துடிப்பாகப் பங்காற்றுதல் வேண்டும். தாய்மொழி கற்பதனால் பல நற்பயன்கள் ஏற்படுகின்றன என ஆய்வுகள் சுட்டுகின்றன. குறிப்பாக, அறிவுசார் விளைவுகளும் சமுகஞ்சார் விளைவுகளும் ஏற்படுவதோடு பிள்ளைகள் தங்களது பண்பாட்டின் மதிப்பறிந்தும் அதைப் போற்றுகிறார்கள். மேலும், தாய்மொழியைக் கற்பதனால் பிள்ளைகள் தமது மரபையும் வரலாற்றையும் புரிந்துகொள்வதோடு தமது அடையாளத்தையும் போற்றுவார்கள்.
பிள்ளைகள் இளம் வயதிலேயே தங்களது தாய்மொழியை விரும்பச் செய்தல் அவசியம். பிள்ளைகள் வீட்டிலும் பள்ளியிலும் பெறும் அனுபவங்களின் வாயிலாக இதைச் செய்யலாம். பிள்ளைகளுடன் அன்றாடம் தொடர்புகொள்ளக் கூடியவர்களான ஆசிரியர்களும், பெற்றோரும், பராமரிப்பாளர்களும் பிள்ளைகளுடன் நெருக்கமான உறவை வளர்த்துக்கொள்வதோடு அர்த்தமுள்ள விளையாட்டு, தரமான கலந்துரையாடல், ஆகியவற்றின்வழியே தமிழ்மொழி மேம்பாட்டிற்கு ஆதரவளிக்கலாம்.
இளம் பிள்ளைகளது தமிழ்மொழி கற்றலுக்குத் துடிப்பாகப் பங்களிக்க உதவுவதற்காக ஆய்வுகளில் கண்டறியப்பட்ட சில தகவல்களும் நடைமுறைசார்ந்த சில வழிமுறைகளும் இந்த அமர்வில் பகிர்ந்துகொள்ளப்படும்.