பகிர்வு 1

திருமதி பாலமுருகன் சாந்தி
ம செ க சமூக நிறுவனம், Sparkletots (சுவா சூ காங், கட்டட எண் 10)
தன்விவரம்
திருமதி சாந்தி, ம.செ.க சமூக அறநிறுவன பாலர் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் கணிதத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். பாலர் பள்ளிப் பிள்ளைகளுக்குக் கற்பிப்பதில் உள்ள நாட்டத்தினால் மூன்றாண்டு காலம் பகுதி நேரப் பாலர் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். அத்துறையில் தம்மை மேம்படுத்திக்கொள்ள ‘சீட்’ கல்விக் கழகத்தில் பயின்று, இளம்பருவக்கல்வியில் பட்டயம் பெற்றுள்ளார். தமிழ்மொழிமீதுள்ள பற்றால் தமக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, தமிழ்மொழியைக் கற்பித்து வருகிறார். இவர் தமிழ்மொழி கற்பித்தலுக்குரிய சான்றிதழ் படிப்பையும் முடித்துள்ளார். இவர் 2021-ஆம் ஆண்டு கல்வி அமைச்சின் பாலர் பள்ளித் தாய்மொழி ஆசிரியருக்கான நல்லாசிரியர் விருதைப் பெற்றுள்ளார்.
பயன்முனைப்புமிக்க வகுப்பறை நடவடிக்கைகள்வழியே தமிழ்மொழி கற்றல்
சுருக்கவுரை
இளம் பிள்ளைகள் ஒவ்வொருவரும் கல்வி வளர்ச்சியிலும் பழகும் முறையிலும் வேறுபட்டவர்கள் என்பதை நன்கு உணர்ந்து, ஆசிரியர்கள் பிள்ளைகளின் வளர்ச்சிக்கேற்ப இயல்பான கற்றல் அனுபவங்களை உருவாக்கிக் கற்றுத் தர வேண்டும். மேலும், தக்க நேரத்தில் பிள்ளைகளுடன் நிகழ்த்தும் கருத்துப்பரிமாற்றம் அவர்களது முன்னேற்றத்திற்கு உறுதுணையாக அமைகிறது. பிள்ளைகளது கற்றலை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கமூட்டும் சொற்களை அடிக்கடி பயன்படுத்துவதால் அவை பிள்ளைகளுக்கு ஏற்புடைய கற்றல் அனுபவத்தை வழங்குகின்றன. பண்பாட்டுக் கூறுகளையும் புலன்சார்ந்த நடவடிக்கைகளையும் அர்த்தமுள்ள வகையில் பாடங்களில் ஒருங்கிணைப்பதைப்பற்றியும் தமிழ்மொழியின்பால் பிள்ளைகளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவதைப்பற்றியும் பங்கேற்பாளர்கள் இந்தப் பகிர்வரங்கில் அறிந்துகொள்வார்கள்.