பயிலரங்கம் 2

புலவர் வெற்றிச்செழியன்
முதல்வர், பாவேந்தர் தமிழ்வழி மழலையர் தொடக்கப்பள்ளி
தன்விவரம்
புலவர் வெற்றிச்செழியன், பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளியின் ஆசிரியராகவும் பள்ளியின் முதல்வராகவும் பணியாற்றுகிறார். இவர் கல்வித்துறையில் 30 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். இவர் மழலையர் கல்வி மற்றும் தொடக்கக்கல்விப் பாடக்கலைத்திட்ட வரைவுக் குழுவின் பொறுப்பாளராக இருக்கிறார். புலவர் வெற்றிச்செழியன் தமிழ்வழிப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான பயிற்றுவிப்பாளராகவும் இருக்கிறார். இவர் அமெரிக்கா, சிங்கப்பூர் முதலிய நாடுகளிலும் தமிழ்நாட்டிலுமுள்ள மழலை மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிலரங்குகள் நடத்திவருகிறார்.
கதை, பாடல், நாடகம், கட்டுரை என இவரின் 10 சிறுவர் நூல்களும் 5 வாழ்வியல் நூல்களும் வெளிவந்துள்ளன. இவருடைய ‘மழலையர் மணிப்பாடல்கள்’ என்னும் நூல், தமிழ் பேராயத்தின் விருது பெற்றது. சிறந்த கதைசொல்லியான இவர் 60-க்கும் மேற்பட்ட கதைகளைப் பிள்ளைகளுகளுக்குச் சொல்லி இருக்கிறார். இக்கதைகள் ‘கதையாடல்’ என்னும் பெயரில் வலையொலியில் பதிவேற்றியுள்ளார்.
சிறுவர் பாடல்கள்வழியாகவும் விளையாட்டுகள்வழியாகவும் கருத்துப்பரிமாற்றமும் தமிழ்மொழி கற்றல் கற்பித்தலும்
சுருக்கவுரை
பிள்ளைகளுக்கு விளையாட்டில் அதிக ஆர்வம் உண்டு. இது பிள்ளைகளின் அனுபவத்தை அர்த்தமுள்ளதாக்குகிறது. விளையாட்டின்வழி அவர்களின் கவனத்தை எளிதில் ஈர்க்கலாம். அன்றாட வாழ்க்கையில் இவ்விளையாட்டுகளை ஒருங்கிணைப்பதன்வழிக் கருத்துப்பரிமாற்றத்தில் ஈடுபட அவர்களுக்கு வாய்ப்பு அமைகிறது. இதனால், இவ்விளையாட்டுகள் அர்த்தமுள்ள விளையாட்டுகளாக அமைகின்றன. பிள்ளைகள் அர்த்தமுள்ள விளையாட்டில் ஈடுபடும்போது, அவர்கள் சிக்கல்களுக்குத் தீர்வுகள் காண்பார்கள். மேலும், அவர்கள் புதுமையான கோணத்தில் சிந்திப்பதற்கு ஒரு வாய்ப்பாக இவை அமைகின்றன.
சிறுவர் பாடல்கள் பிள்ளைகளின் இலக்கணத்தையும் சொல்வளத்தையும் விரைவாக வளர்க்கக்கூடியவையாகும். சிறு சிறு வரிகளில் அமைந்த ஓசைநயமிக்க சிறுவர் பாடல்கள், கற்றலின்போது இன்பத்தைத் தருகின்றன. குரல், கண்கள், முக பாவங்கள் மற்றும் உடல் அசைவுகளின்வழிச் சிறுவர் பாடல்கள் உயிர் பெறுகின்றன.
இந்தப் பகிர்வரங்கில் சிறுவர் பாடல்களைக் கற்பிக்கும்போது இவற்றில் விளையாட்டுகளை எவ்வாறு ஒருங்கிணைக்கலாம் என்றும் தரமான கலந்துரையாடல்களில் எவ்வாறு பிள்ளைகளை ஈடுபடுத்தலாம் என்றும் அறிந்துகொள்ளலாம்.